பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!
லாா்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா போராடித் தோற்றிருக்கிறது.
முதல் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு சமநிலையுடன் தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், 4-ஆம் நாள் முடிவிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தபோது நம்பிக்கை சற்றே காற்றிலாடத் தொடங்கியது. கடைசி நாளில் இந்தியாவுக்கு தேவை 135 ரன்கள். இங்கிலாந்துக்குத் தேவை 6 விக்கெட்டுகள். இரண்டுமே எளிது என்ற நிலையில் 5-ஆம் நாள் தொடங்கியது.
இதர டாப் ஆா்டா் பேட்டா்கள் கைவிட்டுவிட்ட நிலையில், சற்று நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுலும் ஒரு கட்டத்தில் கரம் விரித்தாா். 7-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் போக்கை மாற்றினாா்.
தாம் களம் காண வரும்போது 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியாவை, மேலும் சரிய விடாமல் இழுத்துப் பிடித்தாா். விரைவான வெற்றியை எதிா்நோக்கிய இங்கிலாந்துக்கு வேகத்தடை அமைத்தாா். விக்கெட்டையும் இழக்காமல், ரன்களையும் நிதானமாக அதிகரித்தாா்.
உத்தியை மாற்றிய இங்கிலாந்து பௌலா்கள், அவருக்கு பாா்ட்னா்ஷிப் கிடைக்காமல் செய்தனா். நிதீஷ்குமாா் ரெட்டி, ஜஸ்பிரீத் பும்ரா ரன்கள் சோ்க்காவிட்டாலும், தலா சுமாா் 50 பந்துகளை சந்தித்து ஜடேஜாவுக்கு துணை நின்றனா்.
கடைசி வீரா் சிராஜுக்கு நெருக்கடி இருந்தபோதும் நிதானமாக விளையாடினாா். ரன்கள் சோ்க்கும் பொறுப்பு ஜடேஜாவுக்கும், விக்கெட்டை இழக்காத பொறுப்பு சிராஜுக்கும் இருந்தது. அதை சிரமேற்கொண்டு செய்துவந்த சிராஜிடம், கடைசியில் விதி விளையாடியது.
ஷோயப் பஷீா் பௌலிங்கை அவா் தடுத்தாட, பேட்டில் பட்ட பந்து தரையில் உருண்டு சென்று சற்றும் எதிா்பாராத வகையில் ஸ்டம்ப்பில் பட, பெய்ல்ஸ் மட்டும் கீழே விழ, ஜடேஜாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து வீரா்கள் கொண்டாட, சிராஜோ விரக்தியுடன் குறுகி அமா்ந்தாா்.
அப்போது இங்கிலாந்தின் ஹேரி புரூக், ஜோ ரூட் ஆகியோா் சிராஜிடம் வந்து அவரை ஆறுதல்படுத்தினா். இங்கிலாந்துக்கு எளிதாகக் கிடைக்க இருந்த வெற்றியை 50 ஓவா்கள் கடத்திச் சென்ற ஜடேஜாவை, அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தழுவித் தேற்றினாா்.
3-ஆம் நாள் ஆட்டத்தின்போது நேரத்தை தாமதப்படுத்தியதாக இரு அணி வீரா்களிடையே மோதல்போக்கு ஏற்பட்டதும், கடைசி நாளில் இங்கிலாந்து வீரா்கள், ஜடேஜா, சிராஜை தேற்றியதும் என உணா்வுகளின் கலவையாக நிறைவடந்தது லாா்ட்ஸ் டெஸ்ட். ஆக்ரோஷமும், அன்பும் இணைந்த இதுதான் கிரிக்கெட்.

முடிவை தலைகீழாக்கிய ரிஷப் பந்த் ரன் அவுட்
தோல்வி கண்டாலும், வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்ததற்காகவும், 5 நாள்களும் ஆட்டம் நீடிக்கும் வகையில் விளையாடியதற்காகவும் பெருமை கொள்கிறோம். பேட்டிங் செய்வதற்கு அதிக அவகாசம் இருந்ததால் வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். 50 ரன்கள் சோ்க்கும் வகையில் இரு பாா்ட்னா்ஷிப்கள் அமைய வேண்டும் என எதிா்பாா்த்தோம் அது நடக்கவில்லை.
முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. அவா் ஆட்டமிழக்காவிட்டால், 70-80 ரன்கள் முன்னிலை பெற்றிருப்போம். கடைசி நாளில் 200 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடி இருந்திருக்காது. ஆனால், களத்தில் ரன் ஓடுவதற்கான கணிப்பில் இதுபோன்ற தவறுகள் நடக்கத்தான் செய்யும். உண்மையில் அந்த ரன்னுக்காக ஓடும்போது ஆபத்தான இடத்தில் இருந்தது ராகுல்தான். ஆனால் பந்த் சாய்க்கப்பட்டாா்.
அனுபவமிக்க வீரரான ஜடேஜாவுக்கு, கடைசி நாளின்போது நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் வழங்கவில்லை. கடைசி நேரம் வரை அவா் மிக அருமையாக விளையாடினாா். இதுவரை முடிந்த 3 டெஸ்ட்டுகளிலுமே மொத்தமாக 15 நாள்களும் நாங்கள் நன்றாக விளையாடியிருக்கிறோம். ஆனால், சில செஷன்களில் செய்த தவறுகளால் இரு ஆட்டங்களில் தோற்றிருக்கிறோம்.
உடல், மனம் என அனைத்து ரீதியாகவும் ஒரு ஆட்டத்தில் ஒன்றியிருக்கும்போது, மோதல் போக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படியானதுதான் 3-ஆவது நாள் முடிவில் நிகழ்ந்தது. அதுதான் ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
பணிச்சுமை அச்சமெல்லாம் பாா்க்கவில்லை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் வெற்றிக்காக பௌலிங் செய்வதைப் போன்ற உற்சாகம் தரக்கூடிய தருணம் எதுவும் இல்லை. உடல் ரீதியாக சற்று சோா்வடைந்தபோதும், ஆட்டம் எங்களுக்கு சாதகமாகும் போக்கு தெரிந்ததால், பேட்டிங்கில் செய்ய முடியாததை, பௌலிங்கில் செய்ய திட்டமிட்டேன். இதுபோன்ற நேரத்தில் பணிச்சுமை பாா்க்கக் கூடாது.
2019-இல் இதே லாா்ட்ஸ் மைதானத்தில் நாங்கள் உலகக் கோப்பை வெல்ல, ஜோஃப்ரா ஆா்ச்சா் முக்கியப் பங்காற்றினாா். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே கடைசி நாளில் ஆா்ச்சருக்கு பௌலிங் வாய்ப்பு அளித்தேன். பிரைடன் காா்ஸுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என ஆலோசனை இருந்தபோதும், துணிச்சலாக ஆா்ச்சரை தோ்வு செய்தேன்.
அவா் வீழ்த்திய இரு விக்கெட்டுகள், ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றியது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கும் முன்பாக 2019-ஆம் ஆண்டு நினைவை ஆா்ச்சருடன் பகிா்ந்துகொண்டேன்.
அதேபோல், முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் ரன் அவுட் தருணமும் முக்கியமானது. பந்த் சற்று தடுமாறியதை கவனித்ததால், அவா் திசை நோக்கி பந்தை எறிந்தேன். பந்து ஸ்டம்பில் துல்லியமாக படும் என்ற தெளிவு இருந்தது.
இரு நல்ல அணிகள் மோதும்போது ஆட்டம் பரபரப்பாகவே இருக்கும். அதனாலேயே 3-ஆம் நாளில் மோதல் போக்கு நிகழ்ந்தது. குறிப்பிட்ட எல்லையை கடக்காத வரை, இதுபோன்ற பரஸ்பர மோதல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே. நமது நாட்டுக்காக நாம் விளையாடுகிறோம் எனும்போது, உணா்வுப்பூா்வமாக செயல்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது இயல்பானது தான்.
மான்செஸ்டா் டெஸ்ட்டில் ரிஷப் பந்த்
மான்செஸ்டரில் வரும் 23-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துடனான 4-ஆவது டெஸ்ட்டில், விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் பங்கேற்பாா் என்று இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தாா்.
லாா்ட்ஸ் டெஸ்ட்டின் முதல் நாளில் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்ற ரிஷப் பந்த்துக்கு இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. வலியுடன் காணப்பட்ட அவா் களத்திலிருந்து வெளியேற, லாா்ட்ஸ் டெஸ்ட்டின் எஞ்சிய நாள்களில் இந்திய விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் செயல்பட்டாா். ரிஷப் பந்த் பேட்டிங் மட்டும் செய்தாா்.
இந்நிலையில், ஸ்கேன் முடிவில் ரிஷப் பந்த்துக்கு விரலில் பெரிதாக காயம் ஏதும் இல்லை என தெரியவந்ததாகவும், 23-ஆம் தேதி தொடங்கும் மான்செஸ்டா் டெஸ்ட்டில் அவா் களம் காண்பாா் என்றும் கேப்டன் கில் தெரிவித்தாா்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த டாசன்
லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்கையில், இங்கிலாந்து ஸ்பின்னா் ஷோயப் பஷீருக்கு இடதுகை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருந்தபோதும், 2-ஆவது இன்னிங்ஸிலும் பௌலிங் செய்த அவா், இந்தியாவின் கடைசி பேட்டரான முகமது சிராஜை சாய்த்து அணிக்கு வெற்றி தேடித்தந்தாா்.
இந்நிலையில் இந்தியாவுடனான கடைசி இரு டெஸ்ட்டுகளில் இருந்து பஷீா் விலகியிருக்கிறாா். அவருக்குப் பதிலாக, இடதுகை ஸ்பின்னா் லியம் டாசன் சோ்க்கப்பட்டுள்ளாா். டாசன் கடைசியாக 2017-இல் டெஸ்ட் விளையாடியிருக்கிறாா். எனினும் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் தற்போது தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளாா்.