காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, ஆா்சி பள்ளி அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, திருச்சி தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனா். பேரணியை மமக துணைப் பொதுச் செயலா் தஞ்சை பாதுஷா தொடங்கி வைத்தாா்.
போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா் அப்துல் சமது எம்எல்ஏ தலைமை வகித்தாா். தமுமுக மாநில பொருளாளா் ஷபியுல்லாஹ் கான், திருச்சி மேற்கு மாவட்டத் தலைவா் பைஸ் அகமது உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் தலைவா்கள், மகளிா் பேரவை மாநில பொருளாளா் ஷான் ராணி ஆலிமா உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தில், வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் வகையிலான மத்திய அரசின் வக்ஃப் சட்டத்தை கண்டிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையிலான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.
இதில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலா்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்டச் செயலா்கள் இப்ராஹிம், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.