விருதுநகர்: `தொடர் விபத்து' 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து - என்ன ...
வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்து: 20 போ் உயிரிழப்பு; 171 போ் காயம்
டாக்கா: வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். 171 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக வங்கதேச ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
வங்கதேசத்தின் குா்மித்தோலா பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக எஃப்-7 பிஜிஐ பயிற்சி போா் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் புறப்பட்டது.
அந்த விமானம் தலைநகா் டாக்காவின் உத்தாரா பகுதியில் உள்ள பள்ளி கட்டடத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதி தீப்பிடித்தது. முதல்கட்ட விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் ராணுவ வீரா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் சுமாா் 20 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறாா்கள். விமானியும் உயிரிழந்தாா். 171 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் விமானப் படை ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் மூலம் ராணுவ மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.
1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைகள்...: விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. விமானம் மோதிய பள்ளிக் கட்டடத்தில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைகள் இருந்தன. இந்த சம்பவத்துக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வேதனை தெரிவித்தாா்.
பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கதேச போா் விமான விபத்தில் பல இளம் மாணவா்கள் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அந்நாட்டுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்’ என்றாா்.