வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்த...
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார். தொடக்கத்தில் இடைக்கால அரசுக்கு அந்நாட்டின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்து வந்தார்.
பின்னர், ராணுவ தளபதியை ஆலோசிக்காமல் இடைக்கால அரசின் தலைவர் சில முடிவுகள் எடுத்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும், தேர்தலை நடத்த பல்வேறு அதிகாரிகளும் ஆதரவளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், யூனுஸுக்கு எதிராக வங்கதேச தலைநகர் டக்காவில் தேசியவாத கட்சியும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு முகமது யூனுஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின.
இதுகுறித்து ஒருங்கிணைந்த மாணவர் அமைப்பான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், ”யூனுஸ் பதவி விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். பணி செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி நிலவுவதாகவும், அதனால் ராஜிநாமா குறித்து யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளுக்குள் பொதுவான முடிவு எட்டப்படவில்லை என்றால் யூனுஸ் ராஜிநாமா செய்துவிடுவார் என்றும் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பார்கள் என்று நம்புவதாகவும் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.