வங்கிகளில் நகைக் கடன் விவகாரம்: மத்திய நிதி அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை
வங்கிகளில் நகைகளை அடமான வைத்து அதை மீட்போருக்கு பழைய முறையிலேயே வட்டி பெற்று நகையை புதுப்பிக்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, தங்க நகைகளை அடகு வைத்தால், பொதுவாக தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித்தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளா்கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
மேலும், கடனை செலுத்தி நகையை மீட்ட அதே நாளில் மறுபடியும் அடகு வைக்க முடியாது. ஒருநாள் முடிந்து பிறகுதான் மீண்டும் புதிய நகைக் கடனை தொடங்க முடியும்.
இந்த அறிவிப்பால் விவசாயிகள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, மத்திய நிதி அமைச்சா், ரிசா்வ் வங்கியின் நடைமுறையை மாற்றி பழைய முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.