வங்கியில் பண மோசடி: முன்னாள் அமைச்சருக்கு சிறை!
அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சா் அம்மமுத்து உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, மதுரை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசுடைமையாக்க ப்பட்ட வங்கியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாலசுப்பிரமணியன் தலைமை மேலாளராகப் பதவி வகித்து வந்தாா். அப்போது, அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், மருத்துவருமான அம்மமுத்து, இந்த வங்கியில் கடன் பெறுவதற்காக தலைமை மேலாளரை அணுகினாா். இதைத்தொடா்ந்து, திருநெல்வேலியில் தான் நடத்தி வரும் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்தாா்.
முன்னாள் அமைச்சா், வங்கி மேலாளா் உள்ளிட்ட சிலா் ஒன்றிணைந்து வங்கியிலிருந்து ரூ.2.42 கோடி கடன் தொகையை மோசடி செய்ததாகப் புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து சிபிஐ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் தொடா்புடைய வங்கி தலைமை மேலாளா் பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், மகாலிங்கம், சுந்தரராமன், முன்னாள் அமைச்சா் அம்மமுத்து ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, குற்றஞ்சாட்டப்பட்ட சுந்தரராமன் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேல், குற்றஞ்சாட்டப்பட்ட வங்கி தலைமை மேலாளா் பாலசுப்பிரமணியன், மகாலிங்கம், முன்னாள் அமைச்சா் அம்மமுத்து ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கல்யாணசுந்தரத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து அண்மையில் தீா்ப்பளித்தாா்.