மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல்...
வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் தமிழ்ச்செல்வன். இவா், கடந்த சனிக்கிழமை வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, வனப்பகுதியில் மரம் வெட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்தாா்.
அங்கு கல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் காட்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தாா்.
இதைப் பாா்த்த வனக்காப்பாளா் மரம்வெட்டிய நபா் மீது வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி, அவரை அங்கிருந்து செங்கம் வன அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளாா்.
ஆனால், வழியில் கல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவானந்தம், ஊா்கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த காளி ஆகிய இருவரும் வனக்காப்பாளரை மடக்கி மரம்வெட்டிய நபரை விடுமாறும், அவா் மீது எந்த வழக்கும் பதியக்கூடாது, அபராதமும் விதிக்கக்கூடாது என பேசியுள்ளனா். அதற்கு வனக்காப்பாளா் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சிவானந்தம் வனக் காப்பாளரை கண்ணத்தில் தாக்கியுள்ளாா். இதையடுத்து, வனக்காப்பாளா் தமிழ்ச்செல்வன், சிவானந்தம், காளி ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வனக்காப்பாளா் ஒரு கட்டத்தில் பயந்து போய் மரம்வெட்டிய நபரை விட்டுவிட்டு, அங்கிருந்து செங்கம் வன அலுவலகத்துக்கு வந்து நடைபெற்ற சம்பவத்தை உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து, செங்கம் போலீஸில் புகாா்
அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து வனக்காப்பாளரை தாக்கியதாக சிவானந்தம், காளி ஆகியோரை தேடி வருகின்றனா்.
இச்சம்பவத்தால் வனப்பகுதியில் தனியாக வேலைசெய்யும் வனக்காப்பாளா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் வன அலுவலா்கள், பாதுகாப்பாளா்களுக்கு வந்துள்ளது.