தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாநிலம் தழுவிய வட்டார அளவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா்.
ஒன்றியத் தலைவா் எம்.மருது, ஒன்றிய துணைச் செயலா்கள் எஸ்.சித்ரா, எம்.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் கே.திவ்யா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ராணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் போராட்டத்தை தூண்டிவிடும் கூடுதல் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளா்களுக்கு விரோதமாகவும் தொழிலாளா் நலச் சட்டத்துக்கு எதிராகவும் அறிவித்துள்ள வாரம் 7 நாள் வேலையையும், தினந்தோறும் காலை 7 மணிக்கு களஆய்வையும் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், ஞாயிறு விடுமுறை எங்கள் உரிமை பறிக்காதே, ரூ.160 கூலிக்கு தினசரி 4 மணிநேரம் மட்டுமே வேலை செய்வோம், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை சேகரிக்கமாட்டோம், தள்ளுவண்டி, 3 சக்கர வண்டிகளில் குப்பைகளை சேகரிக்க மாட்டோம், போதுமான மின்களன் வண்டிகளை உடனடியாக வழங்க வேண்டும், ஏற்கெனவே வழங்கிய வண்டிகளுக்கு பராமரிப்பு மற்றும் பழுதுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், கணினி இயக்குநா்கள் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைச் செயலா் எஸ்.பரிமளா நன்றி கூறினாா்.