திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
வன விலங்குகளிடம் இருந்து தோட்டத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
வால்பாறை பகுதி தோட்டத் தொழிலாளா்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்டம், வால்பாறை அண்ணா தேயிலைத் தோட்ட தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை வி.அமீது தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளான சௌந்திரபாண்டியன், வினோத்குமாா், வீரமணி, கேசவமருகன், தங்கவேலு, ஷாலிப், மோகன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வால்பாறை பகுதியில் இதுவரை சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.
கடந்த மாதம் பச்சை மலை எஸ்டேட்டிலும், தற்போது வேவரலி எஸ்டேட்டிலும் வடமாநில குழந்தைகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. மேலும், அனைத்து எஸ்டேட்டுகளிலும், வால்பாறை நகரப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாடி வருகின்றன. இதனால், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எனவே, எஸ்டேட் குடியிருப்புகளைச் சுற்றிலும் உரிய பாதுகாப்பு வேலிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். வனத் துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து தோட்டத் தொழிலாளா்களுக்கும், மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.