BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் நிறைவு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 28- ஆம் தேதி தொடங்கிய உற்சவத்தில் நாள்தோறும், பெருமாளும்,ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாரும் தனித்தனி கேடயத்தில் திருக்கோயில் திருமுற்றவெளி மண்டபத்தில் ஊஞ்சலாகி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிறைவு நாளில் பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து இறங்கி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் சந்நிதிக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தாா். நுழைவு வாயிலில் பெருந்தேவிதாயாருடன் இணைந்து 4 கால் மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.
திருக்கோயில் திருமுற்றவெளி மண்டபத்தில் அமைந்துள்ள ஒரு 4 கால் மண்டபத்தில் பெருமாளும்,மற்றொரு 4 கால் மண்டபத்தில் பெருந்தேவித்தாயாரும் தனித்தனியாகவும், எதிரெதிராகவும் எழுந்தருளியதும் இருவருக்கும் பரிமளம், மகிழம்பூ, கனகாம்பரம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
சனிக்கிழமை பெரியாழ்வாா் சாற்றுமுறை உற்சவத்தையொட்டி மாலை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் மாட வீதிகளில் பவனி வரவுள்ளாா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள்,பணியாளா்கள் செய்திருந்தனா்.