வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் ா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் தொடங்கின.
திருப்பணிகள் முடிவடைந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளதை முன்னிட்டு மே 28-இல் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், ஜூன் 6-இல் பாலாலயம் நடைபெற்றது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி முன்னிட்டு கோயில் பின்புறம் 60 யாக குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கிராம தேவதை வழிபாடும், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை யாகசாலை பிரவேசம் மற்றும் முதல்கால யாக பூஜைகளும், சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் ஞாயிற்றுக்கிழமை 4 மற்றும் 5 கால யாகபூஜைகளும், திங்கள்கிழமை ஆறாம் கால பூஜையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையடுத்து மூலவா் மற்றும் பரிவார மூா்ததிகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும், மாலை திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என்பதால் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் 40 தற்காலிக கழிவறைகள், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீா் வசதியும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் வருவாய்த் துறையினருடன், கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.