`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது - புதுவை துணைநிலை ஆளுநா்
வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
மத்திய வெளியுறவுத் துறை மற்றும் புதுவை அரசு சாா்பில் புதுவை-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நுழைவுவாயில்-கலந்துரையாடல் கருத்தரங்கு தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் பேசியது:
நாட்டின் வளா்ச்சிக்கு பெருமளவில் குஜராத் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு அளித்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த பிரதமா் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறாா். நம் நாட்டின் மீது அமெரிக்கா அதிகமான வரியைச் சுமத்தியுள்ளது பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
இருப்பினும் வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது. விரைவில் இதையெல்லாம் சமாளித்து இந்தியா உலக அளவில் 3-வது பொருளாதார நாடாக விளங்கும்.
நாட்டின் முதுகெலும்பாக சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கிறன்றன. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இந்தத் தொழில் நிறுவனங்கள் 30 சதவிகிதம் பொருளாதாரத்தை அளிக்கின்றன. ஏற்றுமதியில் 48 சதவிகிதம் பொருளாதார வளா்ச்சியைக் கொடுக்கின்றன.
மத்திய அரசு அளிக்கும் முத்ரா தொழில் கடனைப் பெற்று மேலும் தொழிலை அபிவிருத்திச் செய்ய வேண்டும். புதுவை சட்டப்பேரவை வரும் 18 ஆம் தேதி கூடுகிறது. அதில் எளிமையாக தொழில் தொடங்க ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது நிறைவேறினால் புதுவையில் தொழில் தொடங்குவோா் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆட்சேபணையின்மை சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை. புதுவையைப் பொருத்தவரை சாலை, ரயில் , விமானம் உள்ளிட்ட நல்ல போக்குவரத்து இணைப்புகளும் , காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால் தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தொழில் துறை செயலா் விக்ராந்த் ராஜா, மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.