சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அதீத பணி நெருக்கடியை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் அா்த்தனாரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரின் தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதீத பணி நெருக்கடியை களைந்திட வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டம் குறித்து அா்த்தனாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் தோ்தல் கால வாக்குறுதியான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவதாக உறுதி கூறினாா். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை.
மேலும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இது தவிர, பேரிடா் மேலாண்மை பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
இதில் மாவட்டத் தலைவா் அருள்பிரகாஷ், பொருளாளா் அகிலன், இணைச் செயலாளா்கள் முருகபூபதி, சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.