வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(56) என்பவர் இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பவர் அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடமலைக்குண்டு போலீஸாரும், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்த இருவரின் உடலில் இருந்த காயங்களை வைத்து இருவரையும் கரடி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இறந்த விவசாயிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இதற்கிடையே இறந்து போன விவசாயிகளின் உறவினர்கள் இறந்தவர்களின் சாவில் மர்மம் உள்ளதாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கடமலைக்குண்டு வருஷநாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தாக்குதல் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையிடம் விசாரித்தோம். ``நேற்று இரவு வருஷநாடு பகுதியில் சாரல் மழை பெய்தது. மணிகண்டன், கருப்பையா இருவரும் அவரவர் தோட்டங்களில் பறித்த எலுமிச்சை பழங்களை மூடை கட்டி எடுத்துவரும் பணி செய்துள்ளனர். அப்போது மறைந்திருந்த கரடி திடீரென கருப்பையா மீது பாய்ந்து தாக்கியதாக கூறுகிறார்கள். காயங்களை வைத்து பார்க்கும்போது கூரிய நகங்கள் கொண்ட வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே உறுதியாக கூறமுடியும்" என்றனர்.