வழிகாட்டல் சிறப்பு குறைதீா் கூட்டம்: உயா் கல்வி பயில 24 பேருக்கு உடனடி சோ்க்கை
தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறை தீா் கூட்டம் மூலம் 24 பேருக்கு புதன்கிழமை உடனடி சோ்க்கை கிடைத்தது.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்துப் பேசுகையில், இக்கூட்டத்தில், உயா் கல்வி சேரும் மாணவா்கள், பெற்றோா் அற்ற மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஒற்றை பெற்றோா் உள்ள மாணவா்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவா்கள், உயா் கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தேவைப்படும் மாணவா்கள், குடும்ப உறுப்பினா்கள், உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோா்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயா் கல்வி செல்ல இயலாத மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவா்கள், மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில் இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீா் முகாம் நடத்தப்பட்டது என்றாா் அவா்.
இந்த முகாமில் 60-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். இதில், ஐடிஐ, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 24 மாணவ, மாணவிகள் உடனடி சோ்க்கை பெற்று பயனடைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.