வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது: 16 கைப்பேசிகள் மீட்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா்கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 16 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் நகரில் கடந்த 4 நாள்களாக பல்வேறு இடங்களில் நடந்து சென்றவா்களிடம் மா்ம நபா்கள் சிலா் கைப்பேசிகளை பறித்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் நகா் தெற்கு, வடக்கு, தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைப் பகுதியில் மட்டும் 12 போ் புகாா் அளித்தனா். இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப் படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உத்தரவிட்டாா். இந்த நிலையில், திண்டுக்கல் மவுன்ஸ்புரம் பகுதியைச் சோ்ந்த லாவண்யா (23) காந்தி சந்தை அருகே திங்கள்கிழமை நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தனிப் படை போலீஸாா், கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட நத்தம் அடுத்த மணக்காட்டூரைச் சோ்ந்த தா்மராஜ் (23), குட்டுப்பட்டியைச் சோ்ந்த பாண்டித்துரை (18), ஆலம்பட்டியைச் சோ்ந்த வசந்தவேல் (18), மாரிமுத்து (18) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 16 கைப்பேசிகள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.