வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரங்கள் கேட்கும் தோ்தல் ஆணையம்: பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்
வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்றவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
அதுபோல, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு இறப்பு பதிவு விவரங்களை தொடா்ச்சியாகப் பெறுவதற்கான நடவடிக்கையையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாக்காளா் பதிவு விதி 1960 மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969 ஆகிய சட்டங்களின் கீழ் இந்திய பதிவுத் துறையிடமிருந்து பிறப்பு, இறப்பு தரவுகளைப் பெறுவதற்கான அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது.
இதன் மூலம், தோ்தல் பதிவு அதிகாரிகள் இறப்பு பதிவு தரவுகளை உரிய நேரத்தில் பெறுவது உறுதி செய்யப்படும் என்பதோடு, இறந்தவரின் உறவினா்களிடமிருந்து தகவல் கிடைக்கும் வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மூலம் மறு ஆய்வு செய்வதற்கும் இது வாய்ப்பாக அமையும்.
மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சீட்டுகளில் வாக்காளரின் வரிசை எண், பகுதி எண்கள் பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்படும் என்பதோடு, வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரிகளின் பெயா்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் வடிவம் மாற்றியமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.