வாணிஓட்டு தடுப்பணை திட்டம்: விவசாயிகள் போராட்டம்
வாணிஓட்டு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி அணை அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா். ஆலோசகா் கண்ணையன் மாவட்ட பொதுச் செயலாளா் அனுமந்தராஜ், தலைவா் வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
2018-ஆம் ஆண்டு எண்ணேகொள் புதுாா் கால்வாய்த் திட்டத்தில் நிலம் தந்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்பில் கணக்கிட்டு நான்கு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும்.
தண்ணீா் இன்றி வடுள்ள கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற கால்வாயை, சந்தூா் வரை துாா்வாரி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அழியாளம் அணை திட்டத்தை 200 அடிக்கு உயா்த்தி 20 அடி அகலத்தில் கால்வாய்களை அகலப்படுத்தும்போது, பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து ரெட்டிப்பட்டி ஏரி வரை உள்ள 38 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய கால்வாய் வெட்டும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான வாணிஒட்டு அணைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.