கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா
வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்தே காணப்படும். இதற்கிடையே சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை திட்டமிட்டபோது வாணியம்பாடி நகரை ஒட்டி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன .
இந்த புறவழிச்சாலையின் இரு புறமும் வாணியம்பாடி நகராட்சி சார்பாக பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது .

இதில் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நின்று செல்லவும்... பயணிகள் வசதிக்காகவும் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற் கூடத்திற்கு, பெங்களூரு , ஓசூர் , சேலம் , தருமபுரி , திருப்பத்தூர் போன்ற நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்னை மற்றும் வேலூர் மார்க்கமாக தினசரி இந்த நிறுத்தத்தை கடந்து செல்கின்றன.
இந்த பயணியர் நிழற்கூடத்தை ஒட்டி பொது கழிவறை ஒன்று அமைப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் தற்போதைய நிலை எட்டி பார்க்கக்கூடமுடியாத அளவில் இருக்கிறது . பயன்பாட்டிற்கு வந்து பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்ததா அல்லது பயன்பாட்டிற்கு வராமலே பழுதடைந்ததா இந்த கழிவறை என்ற குழப்பம் தான் ஏற்படுகிறது.
உள்ளே நுழையமுடியாதவாறு குவிந்து கிடக்கும் குப்பைகளை தாண்டி உள்ளே எட்டி பார்த்தால் வாணியம்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் மொத்த குப்பைகளை இங்குதான் கொட்டுகிறார்களோ என்று எண்ணுமளவுக்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

இந்த கழிவறையின் உள்ளே குவிந்துள்ள குப்பைகள் மக்கி போய் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு வீசி சென்றுள்ள ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன. இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கழிவறைகளும் தண்ணீரை பார்த்து எத்தனை மாதங்கள் ஆனது என்று தெரியவில்லை.
தண்ணீர் இணைப்பு குழாய்கள் உடைந்தும் சில பாகங்கள் காணாமல் போயும் உள்ளது. மேற்கத்திய பாணியில் உள்ள கழிவறையில் பாதி காணாமலும் மீதி சிதிலமடைந்தும் உள்ளது. இங்கு வரும் பயணிகளுக்கு அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்க கூட அருகாமையில் எந்த கழிப்பறை வசதியும் இல்லை . இது குறித்து பேருந்திற்க்காக காத்திருந்த பெண் பயணிகள் சில பேரிடம் பேசினோம்.

"எங்களுக்கு தெரிந்து இந்த டாய்லெட்டை யாரும் யூஸ் பண்ண மாதிரி தெரியல. மது குடிக்கிறவங்க தண்ணி அடிக்கவும் இரவு நேரத்தில் தவறான செயல்களுக்கு பயன்படுத்தற மாதிரிதான் தெரியுது.. ஆண்களுக்கு பரவாயில்லை ..அவசரம்னா அந்த பக்கம் திறந்தவெளியில் ஒதுங்கிடறாங்க .. பெண்கள் நிலை தான் பாவம்" என்றனர்.
இது குறித்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் முஸ்தபாவை தொடர்பு கொண்டு கேட்டோம். விவரங்களைச் சொன்னதும்... ``என்னது... அந்த கழிவறை பயன்பாட்டில் இல்லையா? " என்று வியப்பாக கேட்டார் . நாம் பதிவு செய்திருந்த சில புகைப்படங்களை ஆதாரமாக அனுப்பி வைத்தோம். ``ஃபீல்ட் விசிட் போயிட்டு உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்" என்றவர், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் .
