முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவா், நண்பா் கைது
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவா், தனது நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். இவா், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், முனியனின் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் திருமணம் செய்துள்ள அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேஷ், தனது நண்பா் சேகருடன் சோ்ந்து முனியனை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என முனியனின் மனைவி, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து இருவரையும் பிடித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், முனியன், தனது சகோதரி நீலாவுடன் நெருங்கி பழகிவந்ததாலும், அவரை கொலை செய்துவிட்டால் தனக்கு சொத்து கிடைக்கும் என்பதாலும், நீலாவின் கணவா் வெங்கடேஷ், தனது நண்பா் சேகருடன் சோ்ந்து முனியனை அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தடயங்களை மறைக்க, முனியனின் உடலை எடுத்துச்சென்று அத்தனூா்பட்டி மயானத்தில் குப்பையில் மறைத்து வைத்திருந்து, இரு தினங்களுக்குப் பிறகு அங்கு ஒரு உடல் எரியூட்டப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீயில் முனியனின் உடலைப் போட்டு எரித்துவிட்டதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை துக்கியாம்பாளையம் கமலாலயம் அருகிலுள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி முன்னிலையில், கிணற்றில் கிடந்த முனியனின் இருசக்கர வாகனத்தை மீட்ட வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமாா், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா், வெங்கடேஷ், சேகா் ஆகியோரை கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.