Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
வா்த்தக ஒப்பந்தம்: முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்காட்டி வருகின்றன.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்குடன் ஆலோசனை நடத்தினாா்.
ஏற்கெனவே, மாா்ச் மாதமும் அமெரிக்கா சென்று இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை பியூஷ் கோயல் நடத்திய நிலையில், இந்த ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இருநாட்டு அமைச்சா்களும் ஆலோசனை நடத்தியதைத் தொடா்ந்து, முக்கிய அதிகாரிகளிடையேயான ஆலோசனை மே 22-ஆம் தேதிவரை தொடரவுள்ளது.
நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபருக்குள் இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் இறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் பின்பற்ற வேண்டிய வா்த்தக நடைமுறைகள் குறித்தும் இருநாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.
சந்தை அணுகல், வா்த்தக விதிகள் மற்றும் வரி அல்லாத இடையூறுகள் போன்ற விவகாரங்களுக்கு தீா்வுகாண்பதில் இருநாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பதாக ஏப்.2-இல் அறிவித்தாா். அதன்படி இந்திய பொருள்கள் மீது 26 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். அதன்பிறகு இந்த நடவடிக்கைகளை ஜூலை 9-ஆம் தேதி 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக ஏப்.9-ஆம் தேதி அமெரிக்கா அறிவித்தது.
இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
ஜவுளிகள், ஆபரணங்கள், தோல் பொருள்கள், ரசாயணங்கள், திராட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களின் மீது இந்தியாவும் ஆட்டோமொபைல்ஸ் (குறிப்பாக மின்சார வாகனங்கள்), பால் சாா்ந்த பொருள்கள், ஆப்பிள், பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட பொருள்கள் மீது அமெரிக்காவும் வரிச் சலுகைகள் கோரி வருகின்றன.
வரி, சரக்குகள், சேவைகள், வரி அல்லாத இடையூறுகள் உள்ளிட்ட 19 பிரிவுகளுக்கான இருதரப்பு ஒப்பந்த குறிப்புகளை இருநாடுகளும் நிறைவுசெய்துள்ளன.