கோயிலுக்குச் சென்று திரும்பியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: மூவருக்கு 7 ஆண்ட...
விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசல்: 30-க்கும் மேற்பட்டோர் பலி, பலர் சிகிச்சையில் அனுமதி; என்ன நடந்தது?
கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், ஏராளமானோர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று விஜய், நாமக்கல் பிரசாரத்திற்கு தாமதமாகத்தான் வந்தார். அவசர அவசரமாக, அதை முடித்துவிட்டு உடனே, கரூர் மாவட்டத்திற்கு விரைந்தார். ஆனால், நாமக்கல் - கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் திரண்டு தடைமேல் தடைபோட மிகவும் தாமதமாகத்தான் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார் விஜய். வழி எங்கும் கூட்ட நெரிசல் இருந்ததால் காவல்துறையினரும் விஜய்க்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்த, விஜய் காவல்துறைக்கு சிறப்பான நன்றியை தெரிவித்திவிட்டு பேச்சைத் தொடங்கினார். ஆனால், வரிசையாக ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தின் நடுவே வர, பேச்சை நிறுத்திவிட்டு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

இதையடுத்து பேசிக்கொண்டே இருக்கும்போது விஜய்யின் வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழ, விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார். மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, தாமதமாக வந்த விஜய் நேரமில்லாமல் விரைந்து பேச்சை முடித்துக்கொண்டார்.
விஜய்யின் அருகே இருந்த ஆதவ் ஆர்ஜுனாவும், நிலைமை மோசமாக இருப்பதை எடுத்துரைத்து விஜய்யை விரைந்து அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், அதில் குழந்தைகளும் பலியாகியிருப்பதாகவும் அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். மேலும் பலரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

செல்லும் வழியிலேயே பலர் உயிரிழப்பு
விஜய் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மயங்கியவர்களை மீட்டுச் செல்ல கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தின் நடுவே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை 33-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதுவரையில் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 குழந்தைகள், 16 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. திமுக அமைச்சர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் கரூர் வரவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.