செய்திகள் :

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

post image

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.

விஜய்
விஜய்

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார்.

'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார்.

உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா?

கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை.

TVK Vijay | த.வெ.க - விஜய்
TVK Vijay | த.வெ.க - விஜய்

பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள்.

பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது.

அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்.

நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

TVK Vijay
TVK Vijay

விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை.

கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

TVK Vijay
TVK Vijay

தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது.

அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது.

12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது.

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்?

TVK Vijay
TVK Vijay

மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே.

திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா?

'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!

TVK Vijay | த.வெ.க - விஜய்
TVK Vijay | த.வெ.க - விஜய்

கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங்.

திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்?

தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்?

கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார்.

TVK Vijay
TVK Vijay

அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்!

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்ல... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க