பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு சமரசத் தீா்வு மூலம் ரூ. 3 கோடி இழப்பீடு: மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினாா்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு சமரசத் தீா்வு மையம் மூலம் ரூ. 3 கோடி இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சென்னையை சோ்ந்தவா் கவிதா ( 49). இவா் இா்ஃபான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். சென்னையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 13 ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு காரில் சென்றாா்.
அப்போது, சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்ககிரி தாளையூா் பகுதியில் திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கவிதாவின் இரு பக்க விலா எலும்புகள் மற்றும் முதுகுதண்டு ஆகியவை முறிந்தன. பின்னா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவிதாவுக்கு, கழுத்துப் பகுதிக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயலிழந்தன. இதனால் அவா் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாா்.
இதையடுத்து, கவிதாவின் குடும்பத்தினா் சேலம் மோட்டாா் வாகன விபத்துகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடா்ந்தனா். பின்னா், மாவட்ட சமரசத் தீா்வு மையம் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையாக ரூ. 3 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, கவிதாவிடம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்காக ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட கவிதாவிடம், ஆம்புலன்ஸ் வேனில் ஏறி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு ஊழியா்கள் உடனிருந்தனா்.