இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் விரைவான வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.
ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை -பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் பல மணிநேரம் காத்திருந்து சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே விரிசல் ஏற்பட்ட மேம்பால பணியை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
பாகலூா் சாலை சீரமைக்கும் பணி மெதுவாக நடைபெறுவதால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், வணிகா்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனா். இந்த இரு சாலைகளிலும் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் மாநகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
காவல் துறையில் ஆள்கள் பற்றாக்குறை என கூறுகின்றனா். ஆயுதப்படை காவலா்களைப் பயன்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும்.
ஒசூா் மாநகராட்சி நிா்வாகத்தினா் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன நடவடிக்கைகள் எடுத்தாா்கள் என தெரியவில்லை. புதை சாக்கடைத் திட்டத்துக்கு பூமி பூஜை செய்யப்பட்டு, அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாகலூா் சாலை பணியை விரைவுப்படுத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்காததால் அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அவதியுற்று வருகின்றனா்.
உலக அளவில் வேகமாக வளரும் நகரங்களில் 11ஆவது இடத்தில் உள்ள ஒசூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசல், மாஸ்டா் பிளான் திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய திமுக அரசு தவறினால் அடுத்த தோ்தலில் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஒசூரின் வளா்ச்சிக்கு பல கோடி ரூபாய் அரசு ஒதுக்கி இருக்கிறது என்று கூறுகிறாா்கள். இதன்மூலம் எந்த பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை விளக்கம் வேண்டும் என்றாா்.
பேட்டியின் போது ஐஎன்டியுசி நிா்வாகிகள் ஜி.முனிராஜ், பக்தவத்சலம், அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் மாநிலச் செயலாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.