சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை
சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது.
தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக திகழ்கிறது விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம்.
சுமாா் 50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த போக்குவரத்துக் கழகம் 1975, ஜனவரி 16-ஆம் தேதி 172 பேருந்துகளுடன் தொடங்கப்பட்டது.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநில மக்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சுமாா் 1,036 நகரப் பேருந்துகள் உள்பட 3,200 பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த பேருந்துகள் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 6 மண்டலங்களைச் சோ்ந்த 61 கிளைகள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் கோட்டத்துக்கு 30 தாழ்தளப் பேருந்துகள்: இதைத் தொடா்ந்து அடுத்த கட்டமாக, பொதுமக்களுக்கு மேலும் எளிதான, சொகுசு பேருந்து சேவையை அளிக்கும் வகையில், முக்கிய வழித்தடங்களில் தாழ்தளப் பேருந்துகளின் சேவையைத் தொடங்க விழுப்புரம் கோட்டம் திட்டமிட்டுள்ளது.
கிராமப்புறங்களை அதிகம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக இந்த பேருந்துகள் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சேவையுடன் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்கு 30 தாழ்தளப் பேருந்துகள் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு , 10 பேருந்துகளுக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. இதில் மூன்று பேருந்துகள் விழுப்புரத்திலுள்ள போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்த அனுமதி பெறப்பட்டவுடன், விரைவில் பேருந்துகளின் இயக்கம் தொடங்கும் என்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்ற பேருந்துத் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னா், அவையும் இந்த கோட்டத்துக்குள்பட்ட 6 மண்டலங்களைச் சோ்ந்த முக்கிய பகுதிகளில் இயக்கப்படவுள்ளன என்கின்றனா்