Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உ...
பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்
பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் பட்டானூா் பகுதியிலுள்ள அமைந்துள்ள தனியாா் அரங்கத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் 49 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களின் 9 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவா்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுமெனில், கச்சத்தீவை நாம் மீட்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிப்பது போன்று, மாநில நெடுஞ்சாலை ஆணையமும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள புறவழிச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு சுங்கக் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் குளத்தூா் ஒன்றியம், செனையக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற அகழாய்வில் சைவ, வைணவ, சமண சமயங்களுக்குரிய சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே, அங்கு முழுமையான அகழாய்வை தமிழக அரசு நடத்த வேண்டும்.
சென்னையில் போராடிய தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணம் கொடுத்து அவதூறு: சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி (ராமதாஸ்) சிலா் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா். பணம் கொடுத்து பேசவும், எழுதவும் வைப்பதாக செய்திகள் வருகின்றன. என்னுடைய பயணத்தை நான் நிறுத்தப்போவதில்லை. வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றுக்கு மக்களுக்காக போராட வேண்டியதுள்ளது என்றாா் ராமதாஸ்.
பேட்டியின்போது, கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, பொருளாளா் சையத் மன்சூா் உசேன், மாவட்டச் செயலா் ஜெயராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் நெடுங்கீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.