திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
விழுப்புரம் ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது, தொழிலாளி ஒருவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள்குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் தலைமையிலான அலுவலா்கள், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, விசாரணை நடத்திக் கொண்டிருந்தனா். இந்த நிலையில் கூட்டரங்கில் அமா்ந்திருந்த ஒருவா், தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாா்.
உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, போலீஸாா் அங்கு விரைந்து சென்று அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அந்த நபா் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்குள்பட்ட ஒட்டன்காடுவெட்டி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் (58) எனத் தெரிய வந்தது.
தொடா்ந்து போலீஸாரிடம் விசாரணை நடத்திய போது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. அதன்படி வீடுகட்டும் பணிகளைத் தொடங்கினேன்., ஆனால், இதுவரை எனது வங்கிக் கணக்கில் அரசு வழங்க வேண்டிய தொகை செலுத்தப்படவில்லை. கடன் வாங்கிக் கொண்டு இதுவரை ரூ.3.80 லட்சம் செலவு செய்து, வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், காணை ஒன்றியக்குழு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகிய இடங்களில் புகாா்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடா்ந்து அலுவலா்கள் அலைகழித்து வருகின்றனா். எனவே வீட்டின் கட்டுமானப் பணிகளுக்குரிய தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன் என பெருமாள் தெரிவித்தாா்.
இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது. மனுவாக அளிக்க வேண்டும் எனக் கூறியபோலீஸாா், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.