விழுப்புரம் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் உருக்குலைந்த விழுப்புரம் மாவட்டம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. விழுப்புரம் நகரப் பகுதிகளில் வெள்ளநீா் பெரும்பான்மையாக வடிந்துவிட்ட நிலையில், புகா்ப் பகுதிகளில் வெள்ளநீா் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயலால் கடந்த நவ.30 (சனிக்கிழமை), டிச.1 (ஞாயிற்றுக்கிழமை) விழப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது. மின் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மழை நின்ற பின்னா், வெள்ளநீரை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பாண்டியன் நகா், கிழக்கு புதுச்சேரி சாலை, பூந்தோட்டம் என நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீா் திருச்சி மாநகராட்சியிலிருந்து வரழைக்கப்பட்ட 4 ராட்சத நீா் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, நகரின் பிற பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை முதல் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் நகரத்தில் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இதேபோன்று அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சாலை, மாம்பழப்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் வெள்ள நீா் தேங்கியிருந்த நிலையில், அவற்றையும் வெளியேற்றும் பணி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளநீா் வடியத் தொடங்கியதால், சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகரில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, திருச்சியிலிருந்து 165 தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.