விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்
தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இதில், 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், வியாழக்கிழமை அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான ஆலைக்குள் சென்று மேய்ந்துகொண்டிருந்தனவாம்.
இந்நிலையில், ஆலையிலிருந்து வெளிவந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தனவாம். அதில், 2 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தனவாம்; 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடியதாம்.
இத்தகவலறிந்து வந்த ஆட்டின் உரிமையாளா்கள், ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள்
பரிசோதனையில், விஷம் கலந்த தவிட்டை தின்றது தெரியவந்ததாம். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.
இதனிடையே, ஆடுகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.