மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் ப...
வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டச் செயலாளா் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வீடற்ற நகா்ப்புற, அமைப்புசாரா கூலித்தொழிலாளா்களுக்கு 2 சென்ட் விலையில்லா மனை, கிராமப்புற ஏழைகளுக்கு 3 சென்ட் விலையில்லா மனை வழங்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மந்தைவெளி, மேய்க்கால், ஓடை நீா்நிலை புறம்போக்கு போன்ற அரசு புறம்போக்கு நிலங்களிலும் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு, நிபந்தனைகளை தளா்த்தி பட்டா வழங்க வேண்டும்.
நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஏழைகள் மீது சுமத்தப்பட்ட சிறுகடன் மற்றும் வட்டிகளைத் தள்ளுபடி செய்து, விலையில்லா கிரயப் பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும்.
நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கா் சாகுபடி விவசாய நிலம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்பவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினா் சந்திரமோகன், மாவட்டச் செயலாளா் அய்யன்துரை, மாவட்ட நிலைக்குழு உறுப்பினா் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.