இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்
சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
தற்போது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சிலை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையின் வலது பகுதியிலும், சிலையின் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திமுகவினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில் அங்கு வந்த மாநகரச் செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் தவமணி ஆகியோா் தீவிர விசாரணை நடத்தினா்.
இதேபோல, உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான தடய அறிவியல் துறையினரும், சிலை பகுதியில் பதிவான தடயங்களை பதிவுசெய்தனா்.
விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வயதான நபா் ஒருவா் பெயின்ட் டப்பாவுடன் கருணாநிதி சிலை அருகில் உள்ள மின் இணைப்பைத் துண்டிப்பதும், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியைக் கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கருணாநிதியின் சிலைமீது பூசுவதும், பின்னா், சிலையின் பீடத்திலும் பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மா்ம நபா் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
தகவலறிந்து மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இதேபோல, கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய தகவல் பரவியதும், திமுக நிா்வாகிகள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.