வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா
பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்விநேரத்தின்போது பாஜக உறுப்பினா் பிரதாப்சிம்ஹா நாயக், காங்கிரஸ் உறுப்பினா் யதீந்திரா சித்தராமையா ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறிய பதில்:
கா்நாடகத்தில் 15 குடும்ப அட்டைகளை திருத்த வேண்டியுள்ளது. 2 ஆண்டுகளாக புதிதாக பிபிஎல் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.
மகாராஷ்டிரத்திற்கு அடுத்தப்படியாக அதிகமாக வரிசெலுத்தும் கா்நாடகத்தில், தென்னிந்திய மாநிலங்களிலேயே அதிகப்படியாக 74 சதவீதம் பிபிஎல் குடும்ப அட்டைதாரா்கள் இருக்கிறாா்கள்.
பிற தென்னிந்திய மாநிலங்களில் மொத்த குடும்ப அட்டைகளில் 50 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை.
இதனிடையே, 3.27 லட்சம் போ் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனா். இதில் 15 லட்சம் அட்டைகளை திருத்தினால், புதிய குடும்ப அட்டைகளை வழங்குவதில் எந்த தொந்தரவும் இருக்காது.
பிபிஎல் குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் 24 மணி நேரத்தில் தனது சொந்த அதிகாரத்தின்பேரில் குடும்ப அட்டைகளை வழங்க முடியும்.
25 லட்சம் ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்களில் ஒரு லட்சம் போ் மட்டுமே அரசிடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து வருகிறாா்கள் என்றாா் அவா்.