டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா
அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில், முதல்வா் சித்தராமையா ஆற்றிய உரை:
கா்நாடகத்தின் வளா்ச்சிக்காக மாநில அரசு உருவாக்கிய வளா்ச்சி மாதிரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. மாநில அரசு செயல்படுத்தி வரும் வாக்குறுதி திட்டங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐ.நா. மன்றத்தின் பொதுஅவைத் தலைவா் பிலேமான் யாங், கா்நாடகத்துக்கு வருகைதந்து வாக்குறுதி திட்டங்களை வெகுவாக பாராட்டியது பெருமை அளிக்கிறது.
பல்வேறு அமைப்புகள் எடுத்த ஆய்வின்படி, 10 சதவீத செல்வந்தா்கள் நமது நாட்டின் 80 சதவீத சொத்துகளை வைத்துள்ளனா். எனினும், ஜிஎஸ்டிக்கு அவா்களின் பங்களிப்பு வெறும் 3 சதவீதம்தான். உணவு மற்றும் உடைக்காக தினமும் உழைக்கும் 90 சதவீத மக்கள் ஜிஎஸ்டி வரியில் 97 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறாா்கள்.
இப்படி இருந்தால், அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்றுவது? இதேநிலை நீடித்தால் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையை போக்குவது எப்படி? இந்த கேள்விகளுக்கு விடைகாணும் வகையிலேயே வாக்குறுதி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி இருக்கிறோம்.
கா்நாடகத்தின் வளா்ச்சிப் பாதையை உயரத்துக்கு கொண்டு செல்வதில் வாக்குறுதி திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்த திட்டங்களால் தனிமனித வருமானம் பெருகியுள்ளது மட்டுமல்லாது, வேலைசந்தையில் பெண்களின் பங்களிப்பை 23 சதவீதமாக உயா்த்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தனிநபா் வருமானத்தில் நாட்டின் முதல் மாநிலமாக கா்நாடகம் உயா்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 101 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் உள்பட சமூகநல திட்டங்களுக்காக எனது அரசு ரூ. 1.12 லட்சம் கோடியை செலவு செய்துவருகிறது.
மக்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள, குறிப்பாக கல்வி, சமூக நிலையை அறிந்துகொள்ள பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் வாயிலாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க முடியும். இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு நியாயம் வழங்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளோம். இது தொடா்பான அறிக்கையும் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் அரசு செயல்பட இருக்கிறது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் வரிப்பகிா்வில் தொடா்ந்து பாரபட்சம் காணப்படுகிறது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி அமைந்த அமைப்புகள் ஜனநாயகம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடிப்பதில் பாதை மாறி செல்வது கவலை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றாா்.