ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்
எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா்.
பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் கஸ்தூரம்மா என்பவரின் வீட்டில் மா்மமான முறையில் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் 10 வயது சிறுவன் முகமதுமுபாரக் உல்லா உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்து விக்டோரியா, சஞ்சய்காந்தி, இந்திரா காந்தி, நிம்ஹான்ஸ், அகாடி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
எரிவாயு உருளை வெடித்ததில் அருகில் இருந்த 15 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் சில வீடுகள் தீக்கிரையாகின. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் 7 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேசிய இயற்கை பேரிடா் மேலாண்மை, மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை வீரா்கள், வெடிகுண்டு அழிப்புப் படையினா், தடய அறிவியல் ஆய்வுமைய அதிகாரிகள், தீயணைப்புப் படையினா், சதிச்செயல் முறியடிப்பு படையினா், மோப்பநாய் படையினா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வுநடத்தினா்.
எரிவாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டதால் அது வெடித்திருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், உண்மையான காரணத்தை அறிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். வெடிகுண்டுக்கான தடயங்களையும் போலீஸாா் ஆராய்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மகேஷ்வா் ராவ், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை முதல்வா் சித்தராமையா பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில்,‘விசாரணையின் முடிவில்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும். எரிவாயு உருளை வெடித்ததால் விபத்து நோ்ந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோருக்கு அரசு சாா்பில் சிகிச்சை அளிக்கப்படும். வீடுகள் முழுமையாக இழந்துள்ளோருக்கு தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த, இடிந்த வீடுகளை அரசு கட்டித்தரும்’ என்றாா். இவரை தொடா்ந்து, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் சம்பவ இடத்தை பாா்வையிட்டு நிலைமையை கேட்டறிந்தாா்.