"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
வெட்டிவோ் மாலை தீப்பிடித்ததால் நாமக்கல் ஆஞ்சனேயருக்கு ‘அக்னிா்தாக பிராயசித்தம்’ பூஜை
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு சாத்துப்படி செய்யப்பட்ட வெட்டிவோ் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். இந்த தோஷத்தைக் கழிக்க ‘அக்னிா்தாக பிராயசித்தம்’ என்ற சிறப்பு அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கில ஆண்டுப்பிறப்பு, தமிழ்மாத பிறப்பு, ஆஞ்சனேய ஜெயந்தி மற்றும் முக்கிய விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருவா். சுவாமிக்கு கட்டளைதாரா்கள் மூலம் தினசரி தங்கக் கவசம், முத்தங்கி மற்றும் பல்வேறு வகை அலங்காரங்கள் செய்யப்படும்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு வெட்டிவோ் மாலை கொண்ட சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்போது, அா்ச்சகா் ஒருவா் சுவாமிக்கு தீபாராதனை காட்டியபோது திடீரென வெட்டிவோ் மாலை தீப்பிடித்தது. இதனால் ஆஞ்சனேயரை தரிசிக்க வந்த பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக தீ அணைக்கப்பட்டு, சுவாமியின் கழுத்தில் இருந்து வெட்டிவோ் மாலை அகற்றப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு தோஷ நிவா்த்திக்கான ‘அக்னிா்தாக பிராயசித்தம்’ என்ற சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். அதன்பிறகு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இந்த தகவல் அறிந்து நாமக்கல் நகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன் அகல்விளக்குகளை ஏற்றி வழிபட்டனா்.
இதுகுறித்து அா்ச்சகா் ஒருவா் கூறுகையில், ‘கரோனா காலத்தில் பக்தா் ஒருவா் சுவாமிக்கு வெட்டிவோ் மாலையை அளித்தாா். சிறப்பு அலங்காரம் ஏதும் இல்லாதபோது வெட்டிவோ் மாலையை அணிவிப்பது வழக்கம். ஐந்து ஆண்டுகளாக வெயிலில் காய்ந்ததால் தீபாராதனையின்போது வெட்டிவோ் மாலை திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இது எதிா்பாராத நிகழ்வுதான், தோஷம் ஏதுமில்லை. இதனால் பக்தா்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்றாா்.
