குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசா...
வெள்ள பாதிப்புக்கு திமுக அரசின் நிா்வாக திறமையின்மையே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தியும், விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது: ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கும் - மரக்காணத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.
ஆனால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. நிா்வாகத் திறனற்ற அரசால் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு, எந்த அமைச்சரும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, மக்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆறுதல் கூறிய பின்னரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தாா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வா் செல்லாமல், திருமண மண்டபத்துக்குச் சென்று, அங்கு அமர வைக்கப்பட்டவா்களுக்கு மட்டும் நிவாரணப் பொருள்களை வழங்கி விட்டு சென்றுவிட்டாா். துணை முதல்வரும் மக்களை சந்திக்கவில்லை.
கடந்தாண்டு சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மக்களவைத் தோ்தலை மனதில் வைத்துக் கொண்டு ரூ.6 ஆயிரத்தை வழங்கிய திமுக அரசு, தற்போது பாதிக்கப்பட்ட மூன்று மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 ஆயிரம் மட்டும் அறிவித்துள்ளது.
திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையே மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காரணமாகும். எவ்வித முன்னறிவிப்புமின்றி சாத்தனூா் அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டதால், 3 மாவட்டங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.40 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ந.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அா்ஜுனன், நகரச் செயலா்கள் இரா.பசுபதி, சி.கே.ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருப்பதி பாலாஜி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலா் கே.காா்த்திகேயன், மாவட்ட வா்த்தக அணி இணைச் செயலா் சா.செந்தில்வேலன், மாவட்ட பாசறை இணைச் செயலா் நூா்.ஜியாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.