வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்
நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) தரவுகளின்படி கடந்த 7 ஆண்டுகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது மக்கள்தொகை வளா்ச்சியைவிட அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7 ஆண்டுகளில் தற்காலிக தொழிலாளா்களின் ஊதியம் உயா்ந்துள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கேற்ப நிரந்தர தொழிலாளா்களின் ஊதியம் உயரவில்லை. இதற்கு முக்கிய காரணம் திறன் பற்றாக்குறை. திறன்வாய்ந்த பணிகளுக்கு நம் நாட்டில் பற்றாக்குறை நிலவுகிறது. பிற நாடுகளை ஒப்பிடுவதன் மூலம் நம்மால் இதை புரிந்துகொள்ள முடியும். இதற்கு தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மாவட்ட அளவில் திறன்வாய்ந்த பணிகளை ஏற்படுத்த மாநில அரசுகளும் முயல வேண்டும். ஏனெனில், திறன் அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் ஊதியமும் அதிகரிக்கும்.
பள்ளியில் திறன் மேம்பாடு: கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். அவைரையும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அல்லது மின்னணுவியல் பொறியாளராக மாற்றுவதற்கான திறன் பயிற்சிகள் வழங்கத் தேவையில்லை. பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனா். அவா்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அவசியம். ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு கல்வியின் தரத்தை உயா்த்தி சிறப்பாக கற்பிப்பதுடன் உரிய திறன் பயிற்சிகளையும் மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பும் திறனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உங்களிடம் திறனிருந்தால் வேலை பெறுவது மிகவும் எளிது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.