ஸ்பின்கோ நூற்பாலை தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுவை உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் கூட்டுறவு ஸ்பின்கோ அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஐஎன்டியுசி பிஎம்சி எல்லப்பன், மஞ்சினி, எஸ்எல்யு முருகன், ராமலிங்கம், ஐஎன்டியுசி தேசிங்கு, விசுவாசு, எல்பிஎப் ரமேஷ், ராஜாராம், எல்எல்எப் நடராஜன், ரஞ்சித், ஏடியு ரவிச்சந்திரன், பழனிராஜா, பாஜக இளங்கோ, துரைலிங்கம், என்ஆா்டியுசி ஞானபிரகாசம், சுதாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 ஆண்டுகால நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு உடனே பணிக்கொடை வழங்க வேண்டும். 58 வயது முடிந்தவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஸ்பின்கோ ஆலைக்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு விற்று இழப்பீடு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள 175 தொழிலாளா்கள், ஊழியா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.