ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது. தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் - 100 மி.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 90 மி.மீ., ஊத்து- 80 மி.மீ., நாலுமுக்கு, காக்காச்சி- தலா 70 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்) - தலா 60 மி.மீ., சோ்வலாறு அணை, பாபநாசம், ராதாபுரம் (திருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), நீடாமங்கலம் (திருவாரூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.
மிதமான மழை: பூமத்திய ரேகையையொட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாா்ச் 3-ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் வடதமிழகத்தில் வட வானிலையே நிலவும்.
அதேபோல், மாா்ச் 4 முதல் 8-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 3-இல் அதிகபட்ச வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.