மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணைய...
ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை
பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.
வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்யும்போது, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்? என்று ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
மேலும், அவர் பேசியிருப்பதாவது, “இதுபோன்ற செயல்கள் மூலம் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து நீங்கள் வருவாய் பெற முயற்சிக்கிறீர்கள். பல்வேறு வேலைகளிலும் பிகார் மாநில தொழிலாளர்களைச் சார்ந்திருக்கிறீர்கள். எனினும், ஹிந்தியை வெறுத்து ஒதுக்குகிறீர்கள். இது நியாயமா?
ஒவ்வொரு தரப்பும் கோபம் உண்டாகும்போது பிரித்தெடுத்துக்கொள்ள இந்தியா கேக் துண்டா என்ன?”
சென்னையில் தங்கியிருந்து தனது இளமைப் பருவத்தில் கல்வி பயிலும் போது, தன் மீது பாகுபாடு காட்டப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், “1938-இலிருந்தே ஹிந்தி எதிர்ப்பை நாங்கள் கையிலெடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் கல்வியாளர்கள் பலரிடம் கருத்து கேட்டு அதன்பின், அவர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், நடிகர்களிடம் கருத்துகளைக் கேட்டு அமல்படுத்தவில்லை.1968-இல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பவன் கல்யாண் பிறந்திருக்கக்கூட மாட்டார். அவருக்கு தமிழ்நாட்டு அரசியல் தெரியாது. ஹிந்தியை நாங்கள் எதிர்ப்பது இது முதல்முறையல்ல. தாய்மொழியில் படிப்பதுதான் மக்களுக்கு கல்வியறிவு புகட்ட சிறந்த வழியாகும்” என்றார்.