1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப செப்.28-இல் தோ்வு: டிஆா்பி அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும். இந்தத் தோ்வுக்கு ஆக.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் (டிஆா்பி) தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடிதோ்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை தொடா்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இணையவழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, உரிய விவரங்களை சரிபாா்த்து அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு தொடா்பான கோரிக்கை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வு வாரியத்தின் அறிவிப்பின்படி, முதுநிலை ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி ஓஎம்ஆா் ஷீட் வடிவில் நடைபெறவுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பொதுப்பிரிவைச் சோ்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 58-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கு பாடத்திட்டங்கள் ஏற்கெனவே மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுஅறிவு (10 கேள்விகள்), கல்வி உளவியல் (30 வினாக்கள்) பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடவாரியாக காலியிடங்கள் விவரம்: தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருளியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநா் நிலை-1 பதவி 57, உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பதவி - 102.