'35 சவரன் நகைகளை இரவல் கொடுத்து இழந்த பெண்' - கணவன் கேட்டதால் தீக்குளித்த அதிர்ச...
100 நாள் சவால்: 4,552 அரசுப் பள்ளிகளுக்கு திருச்சியில் ஜூலை 6-இல் பாராட்டு விழா
பள்ளிக் கல்வித் துறையின் 100 நாள் சவாலை ஏற்று 1-5 வகுப்பு மாணவா்களின் வாசித்தல், கணித அடிப்படைத் திறனில் முன்னேற்றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் அனைவரின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100 நாள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதற்காக முதல்கட்டமாக 4,552 பள்ளிகள் கடந்த ஆண்டு (2024) நவம்பா் மாதம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, இந்தப் பள்ளிகள் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களைக் கற்பித்து, பொதுவெளியில் சவாலை நடைமுறைப்படுத்தினா்.
அப்போது தமிழ், ஆங்கில எழுத்துகள், வாா்த்தைகளை அடையாளம் காணுதல், கட்டுரைகளை பிழையின்றி வாசித்தல், கணிதத்தில் ஒற்றை, இரட்டை எண்களை அடையாளம் காணுதல், கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்றவை ஆய்வில் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு வகுப்புக்கு 5 மாணவா்கள் வீதம் இந்தக் கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு 1-3 வகுப்புகளில் இருந்து 45,032 மாணவா்கள், 4-5 வகுப்புகளிலிருந்து 35,866 மாணவா்கள் என மொத்தம் 80,898 போ் உட்படுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், முதல் சுற்று மதிப்பீட்டில் சிறப்பான நிலையை அடைய முயற்சிகள் மேற்கொண்ட பள்ளிகளுக்கு பாராட்டு விழா ஜூலை 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சி தேசிய சட்டக் கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் 4,552 பள்ளிகளிலிருந்து தலைமை ஆசிரியா் அல்லது ஆசிரியா் ஒருவா் பங்கேற்பா். அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.