முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
113 முதுநிலை மருத்துவா்களுக்கு சிறப்புப் பயிற்சி
சென்னை மாநகராட்சியில் சுகாதார மையங்களில் புதிதாகப் பணிக்கு சோ்ந்துள்ள 113 முதுநிலை மருத்துவ பட்டதாரி மருத்துவா்களுக்கான சிறப்பு பயிற்சியை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சியின் சுகாதார சேவைகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 155 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதுநிலை பயிற்சி முடித்த 113 மருத்துவா்கள் பணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கான பணி உத்தரவுகள் அண்மையில் வழங்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியில் சோ்ந்தவா்களுக்கான 2 நாள்கள் சிறப்புப் பயிற்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தச் சிறப்புப் பயிற்சியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் மற்றும் மண்டல நல அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.