ஷாஹி ஈத்கா மசூதி ஆய்வுக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் நீட்டிப்பு
14 வயதில் திருமணமான சிறுமி தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உயிரிழந்ததது தொடா்பாக கோட்டாட்சியா் மற்றும் காவல் துறையினரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிகாா் மாநிலம் பாட்னாவைச் சோ்ந்த 19 வயது இளைஞருக்கு 14 வயதான சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன் அவா்களது பெற்றோா் திருமணம் செய்து வைத்துள்ளனா். இதையடுத்து அவா்கள் 2 பேரும் கோவை சுந்தராபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டட வேலை செய்து வந்தனா்.
இந்ந நிலையில் அந்த சிறுமி 80 சதவீத தீக்காயங்களுடன் கடந்த வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பற்றி சிறுமியின் உடல் முழுவதும் பரவியது தெரியவந்தது. இந்நிலையில், அந்த சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த சிறுமிக்கு 14 வயதிலேயே திருமணம் நடந்து இருப்பதாலும், திருமணம் நடந்து ஓராண்டுக்குள்ளேயே உயிரிழந்திருப்பதாலும் அவரது மரணம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துவதோடு, கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.