செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
`1987 இடஒதுக்கீடு போராட்ட வன்முறைதான் என்னை தலித் அரசியலுக்கு அழைத்து வந்தது’ - எம்.பி ரவிக்குமார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைத்தற்கான வெற்றிவிழா நேற்று விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன், அமைச்சர் பொன்முடி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், திமுக எம்.எல்.ஏ-க்கள் அன்னியூர் சிவா மற்றும் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த மேடையில் எம்.பி ரவிக்குமார் எழுதிய `சாதியால் சிதைந்த சனநாயகம்’ என்ற புத்தகத்தை வைகோ வெளியிட அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய எம்.பி ரவிக்குமார், ``தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு 1987. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட வரலாற்றில் அழுத்தமாக பதிவை ஏற்படுத்திய ஆண்டு.

அந்த ஆண்டுதான் வன்னியர் சங்கத்தின் சார்பில், இட ஒதுக்கீடு கேட்டு ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு கோரிக்கை வைத்து நடைபெற்ற அந்தப் போராட்டம் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக திரும்பியது. தென்னாற்காடு மாவட்டத்தின் பல இடங்களில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. 1987 செப்டம்பர் 17-ம் தேதி துவங்கிய அந்தப் போராட்டத்தின் தாக்கத்தினால், கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த மிகப்பெரிய தலித் குடியிருப்பு தீ வைத்து எரிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் நான் வங்கி ஊழியராகவும், மனித உரிமை செயல்பாட்டாளராகவும் இருந்தேன். அப்போது உடனே ஆலப்பாக்கம் சென்று அந்த ஊரை பார்த்தேன். இரண்டு பக்கமும் வீடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அப்போது அந்த மக்கள் கதறியழுத காட்சியை நான் பார்த்தேன். வீசிய காற்றில் எழுந்து சுழன்றடித்தது சாம்பல். அந்த சாம்பலின் நெடியை இப்போதும் நான் உணர்கிறேன்.
மார்க்சிய அரசியலை ஏற்றுக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்த நான், தலித் மக்களுக்கான அரசியலை நோக்கி திரும்பியது அந்த சம்பவத்திற்குப் பிறகுதான். 40 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதன்பிறகு எத்தனையோ சம்பவங்கள். 1987-ல் இருந்து 1999 வரை எரிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இன்று நான் வெளியிட்டிருக்கும் இந்த நூலில் 1999-ம் ஆண்டில் நம்முடைய தலைவர் அவர்கள் முதன் முதலில் தேர்தல் களத்தில் நுழைந்தபோது எப்படியான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை பட்டியலிட்டிருக்கிறேன். அது அனைத்தும் ஆவணங்கள். 1999-க்கு முன்பு கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. வழுதாவூரில் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

கீழ் எடையாளத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்ட சம்பவம் என அனைத்தும் இந்த புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது. அன்றைக்கு ஆலப்பாக்கத்தில் வீசியடித்த சாம்பலைப் பார்த்து நான், இந்த மக்களுக்கென்று ஒரு தலைவர் இல்லையா ? யார் வருவார் ? என நினைத்தேன். இரண்டொரு நாள் கழித்து இளையபெருமாள் வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரால், கண்ணீர் விட்டுக் கதறிய அந்த மக்களுக்கு ஆறுதல்தான் கூற முடிந்தது.
அவர்களை அணி திரட்டுவதற்கு, அவர்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு ஆற்றல் கொண்ட தலைவர்கள் அன்று இல்லை. என்னைப் போல ஏராளமான, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யார் அந்த தலைவர் என்று காத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் மதுரை மண்ணில் விடுதலைச் சிறுத்தைகள் என்ற இயக்கத்தை, ஒருவர் கட்டி எழுப்பி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று பேராசியர் கல்யாணி என்னிடத்தில் கூறினார்.
1989-ல் தலைவர் அந்த இயக்கத்தை உருவாக்குகிறார், 1990-ல் அதுகுறித்து நாங்கள் அறிகிறோம். நாங்கள் அன்று மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், அவரை அழைத்துக் கொண்டு வந்து இங்கு கூட்டங்களை நடத்தினோம். பனையடிக்குப்பம் என்ற கிராமத்தில் சாதாரண இடத்தில் அவர் பேசிய அந்தப் பேச்சு, அந்த சுற்றுப்புறத்தில் இருந்த அத்தனை இளைஞர்களையும் ஒரே உரையில் சிறுத்தைகளாக மாற்றியது.
அன்றுதான் நான் உறுதி செய்தேன், இவர்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தலைவர் என்று. இந்த தலைவர் சொன்னால் எதையும் செய்யலாம் என என்னைப் போல லட்சக்கணக்கான இளைஞர்கள் முடிவெடுத்தார்கள். நீங்கள் வேலையை விட்டு வாருங்கள் என்று சொன்னார் தலைவர். என்னைப் போல தோழர் சிந்தனைச் செல்வன், இன்னும் பலர் அரசுப் பணிகளை உதறிவிட்டு வந்தோம். அந்த மந்திர சக்தி கொண்ட தலைவர், எதற்கும் விலை போகாத தலைவர் நம் எழுச்சிச் தமிழர் தலைவர் அவர்கள்.

கன்சிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி. இந்தியாவின் பிரதமர் என்று பேசப்பட்ட, மூன்று முறை மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பாஸ்வான் என எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். என்ன ஆனார்கள் ? அனைவரும் சனாதனத்தோடு சமரசமாகி பதவி கிடைத்தால் போதுமென்று கரைந்து போனார்கள்.
அவர்களுடைய கட்சிகளும் இன்று காணாமல் போய்விட்டன. எந்த மகாராஷ்டிர மண்ணில் புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் செய்தாரோ அங்கு இருக்கும் மக்கள், நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று இன்று நம் தலைவரை அழைக்கிறார்கள். இந்தக் காலத்திலும் விலை போகாத, கொள்கை நெறியில் பிறழாத ஒரு தலைவர் இருக்க முடியுமா ? அப்படி ஒருவர் இருக்கிறார். அந்த அதிசயத் தலைவர் நம்மை வழிநடத்தி தேர்தல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறார்” என்றார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks