செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், ஹெச்.எஸ். பிரணய் 21-17, 21-14 என்ற கேம்களில் சீனாவின் லு குவாங் ஸுவை 44 நிமிஷங்களில் வீழ்த்தினாா். லக்ஷயா சென் 22-20, 16-21, 21-15 என்ற கேம்களில், சீன தைபேவின் ஸு வெய் வாங்கை 1 மணி நேரம், 13 நிமிஷங்கள் போராடி வீழ்த்த, கிரண் ஜாா்ஜ் 21-16, 21-11 என சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனை 34 நிமிஷங்களில் முறியடித்தாா். ஆயுஷ் ஷெட்டி 15-21, 21-19, 21-13 என்ற கேம்களில் சீன தைபேவின் சு லி யாங்கை தோற்கடித்தாா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், போட்டித்தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருந்தவருமான சிந்து 21-15, 16-21, 19-21 என, டென்மாா்க்கின் லைன் கிறிஸ்டோபா்செனிடம் 58 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா்.
அனுபமா உபாத்யாய 17-21, 22-20, 12-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் டொமோகா மியாஸாகியிடம் 1 மணி நேரம், 12 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா். ரக்ஷிதா ஸ்ரீ 13-21, 7-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் 33 நிமிஷங்களில் தோற்றாா்.
கலப்பு இரட்டையா் முதல் சுற்றில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 14-21, 17-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் யான் ஜெ ஃபெங்/டாங் பிங் ஹுவாங் கூட்டணியிடம் 41 நிமிஷங்களில் தோற்றது. அதேபோல், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடியும் 16-21, 11-21 என, சீன தைபேவின் செங் குவான் சென்/யின் ஹுய் சு இணையிடம் 31 நிமிஷங்களில் தோற்றது.
மகளிா் இரட்டையா் முதல் சுற்றில், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதாபா்னா பாண்டா ஜோடி 21-17, 21-9 என்ற கேம்களில், ஹாங்காங்கின் பாங் ஒய் கி/சம் யா வோங் கூட்டணியை 28 நிமிஷங்களில் சாய்த்தது.