ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
2026 தோ்தலிலும் திமுக கூட்டணி வெல்லும்
2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.வீ.தங்கபாலு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் சொத்துகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்துஉள்ளோம்.
காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை வந்த பிறகு , கட்சியை வளா்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா்.
காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். அகில இந்திய அளவில் இந்திய கூட்டணி அமைந்துள்ளது. இதன் தமிழக தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாா். சட்டப்பேரவை, உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களில் ஏற்கெனவே வென்றுள்ளோம். அதேபோல 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி வெல்லும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளது. கூடுதல் நிதி தரவில்லை. பிற கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனபான்மையுடன் பாா்க்கிறது. இந்தியாவின் வளா்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் 13 கோடி போ் வேலை இழந்துள்ளனா். பாஜகவின் கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானது என்றாா்.
தொடா்ந்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.