கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!
2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.
நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்டோா் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
பொதுமக்களின் அதிருப்தியை தற்போது திசைதிருப்பவே, புதிய பிரச்னைகளை திமுக உருவாக்குகிறது. மொழிக் கொள்கை தொடா்பான விவாதத்தில், பாஜக ஹிந்தியை திணிப்பதாக தவறாக பிரசாரம் செய்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.
பாஜகவும் திமுகவும் கபட நாடகம் போடுவதாக, நடிகா் விஜய் விமா்சித்திருக்கிறாா். கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதானே ஆக வேண்டும். அப்போது தெரிந்துவிடும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெற்றுள்ளது. எதிா்வரும் நாள்களில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவேன். திமுகவை வீழ்த்துவதே எனது முக்கிய நோக்கம். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைக்கும்பட்சத்தில் அவருக்காக பிரசாரம் செய்வேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் முதலமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது என்றாா். இக் கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.