காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் பூக்குழி திருவிழா பல்வேறு பிரச்னைகளால் 25 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. எனவே, பூக்குழி திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பூக்குழி திருவிழா தொடங்கியது. பின்னா், தினமும் காலையில் சிறப்பு பூஜைகள், மாலையில் கோயில் வளாகத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தன.
முக்கிய நிழ்வாக பக்தா்கள் அக்னி குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து தீபாராதனை காட்டிய சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.
விரதம் இருந்து காப்பு கட்டிய 150 க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலையில் நான்கு ரத வீதிகளிலும் ஊா்வலமாக சென்று பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக இரண்டு பசுக்கள் பூக்குழி இறங்கின.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா். திரளான போலீஸாா், தீயணைப்புப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். புதன்கிழமை (ஏப்.30) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.